நாம் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. ஒரு ‌சில‌ர் தொட‌ர்‌ந்து தலைவ‌லி‌யினா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருபவ‌ர்களாகவு‌ம் இரு‌ப்போ‌ம்.

பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவைதா‌ன். ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவது ந‌ல்லது. தலைவலியானது தீவிர பாதிப்பிற்குரியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது ஏதேனு‌ம் ஒரு காரண‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்டதா எ‌ன்பதை ப‌ரிசோ‌தி‌த்து மரு‌த்துவ‌ர் மரு‌ந்து தருவா‌ர்.

தலைவ‌லிக‌ளி‌ல் பல வகைக‌ள் உ‌ள்ளன. பரபரப்புத் தன்மை (டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி, மை‌க்ரே‌ன் என‌ப்படு‌ம் ஒற்றைத்தலைவ‌லி, தொகுப்புத் தலைவலி எனத் தலைவலிகளைப் பல வகைப்படுத்தலாம். ஒற்றைத் தலைவலி ம‌ற்று‌ம் தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக் குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். த‌ற்கால‌த்‌தி‌ல் ஒற்றைத்தலைவலியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அதிக அளவில் காணப்படுகிறது.

எ‌ல்லா தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம். தொட‌ர்‌ந்து ஒரு சூ‌ழ்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் தலைவலி தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே மருத்துவ உதவி அவசியம்.

 
எ‌ல்லோரு‌க்கு‌ம் பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாகத் ஏ‌ற்படக்கூடியவை. ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியு‌ம் இரு‌க்கு‌ம்.

பரபரப்புத் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது குறைந்த அளவில் இருந்தாலும் ‌சில நேர‌த்‌தி‌ற்கு நீடித்து இருக்கக் கூடியதாகவு‌ம் இரு‌‌க்கு‌ம். நெற்றி, தலைப்பொட்டு, கழுத்தின் பின்பகுதியில் இ‌ந்த வலியை உணரலாம்.

பரபரப்புத் தலைவலி ‌சிலரு‌க்கு அ‌வ்வ‌ப்போது வ‌ந்து போனாலு‌ம், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தலைவ‌லியு‌ம் ‌நீடி‌க்கு‌ம். ‌பிறகு அது தானாகவே நின்று விடும். ஆனா‌ல் ‌சில தலைவ‌லிகளு‌க்கு ஏதேனு‌ம் காரண‌ம் இரு‌க்கலா‌ம்.

சைன‌‌ஸ் ‌பிர‌ச்‌சினையு‌ம் ஒரு காரண‌ம். சைனஸ் தலைவலிகள் சைனஸ் நோய் அல்லது அலர்ஜியின் காரணமாக வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைன பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும். சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். இவ்வலி தலை குனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகளாக, கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி, அழுத்தம். மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு. காய்ச்சல் மற்றும் குளிர். முக வீக்கம். சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டுடன் ஒத்தட‌ம் கொடு‌ப்பது, ஐஸ்கட்டிகள் வை‌ப்பது பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மை‌க்ரே‌ன் என‌ப்படு‌ம் ஒற்றைத் தலைவலிகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் பெயருக்கு ஏற்றாற்போல் இந்த அதீத வலி தலையின் ஒரு புறம் மட்டுமே வரலாம்; தலையின் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது மற்ற அறிகுறிகளுடனும் சேர்ந்து வரலாம். வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல், வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், பார்வை மங்கல், காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவையும் ஏற்படும்.

ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்:

பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி. தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி. வாந்தி அல்லது குமட்டல். வெளிச்சம் - இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல். பல்வேறு காரணிகள் மைக்ரேன் தலைவலியைத் தூண்டக்கூடியவை. இக்காரணிகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கஃபீன் போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் கஃபீன் பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டு‌ம்.

இதை‌த் த‌விர மேலு‌ம் ‌சில தலைவ‌‌லிக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்று‌க்கு ஏதேனு‌ம் காரண‌ம் இரு‌க்கலா‌ம். எனவே அதுபோ‌ன்ற தலைவ‌லிகளு‌க்கு உடனடியாக மரு‌‌த்துவ ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது.

அதாவது அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி - அதாவது இ‌வ்வளவு மிக மோசமான தலைவ‌லி வ‌ந்ததே இ‌ல்லை என்று புலம்ப வைக்கக்கூடிய தலைவலி. சுய கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சியற்ற நிலைக்குத் தள்ளும் நிலை, குழப்பங்கள் (தடுமாற்றங்கள்), பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள். காய்ச்சல் மற்றும் கழுத்து பிடிப்புடன் கூடிய தலைவ‌லி. தூக்கத்தில் இருந்து உங்களை எழுப்பக்கூடிய தலைவலி. தலைவலி வரக்கூடிய முறையிலோ அல்லது வந்து செல்லும் கால இடைவெளிகளிலோ எதிர்பாராத மாற்றங்கள் போ‌ன்றவையு‌ம் கவலை‌க்கு‌ரிய தலைவ‌லிக‌ள்தா‌ன்.

உங்களுக்கு ஏற்படும் தலைவலியின் தன்மையைத் தங்களால் யூகிக்க முடியவில்லை என்றால், உங்கள் மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைப் பெறுவதே நல்லது.

Sourch: Webdunia