பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற தத்துவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகில் தோற்றுவிக்கப்பட்ட எந்த மதமும் சொல்லாத அளவுக்கு இறைவனின் மார்க்கமாம் இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்;

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.[3:103 ]

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்கள்; ‘இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறதுஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6026

மேற்கண்ட குர்ஆண் வசனமும்-ஹதீஸும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான செய்திகளில் ஒரு உதாரணமாகும். இந்த விஷயங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் என்ன நிலை..?

ஆளுக்கு ஒரு இயக்கம், ஆளுக்கு ஒரு கழகம் என்று பிரிந்து முஸ்லிம்கள் பலவீனப்பட்டு நிற்கிறோம்.

அந்த பலவீனத்தை அப்படியே தொடர்கிறோம் என்று உலகறிய செய்வதில் பெரும்பங்கு வகிப்பது பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள். இடிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள், ஒரு இறைவனை நம்பும் இவர்கள், ஒன்று பட்டுஓரிடத்தில் ஒரு தலைமையின் கீழ் குரல் எழுப்ப தயாராக இல்லை.

ஒவ்வொரு அமைப்பு சார்பாக ஒவ்வொரு இடத்தில் போராட்டம். தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த காலங்களில் ஒன்பது இடங்களில் ஒன்பது அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது . இதை பார்த்த மாற்று மதத்தவர்கள் ஒரு பள்ளிவாசலை மீட்க ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாத இவர்கள் பள்ளிவாசலை மீட்கப்போகிறார்களாம் என்று எள்ளிநகையாடினர்.

பாபர்மஸ்ஜித் போன்ற பொதுப்பிரச்சினையில் கூட இவர்களை ஒன்று கூடவிடாமல் தடுத்தது கர்வமும்-ஈகோவும்-இயக்கவெறியும் அன்றி வேறென்ன..?

 இந்துத்துவா பயங்கரவாதிகள் பள்ளிவாசலை இடித்தபோது அதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் என்று பல அமைப்புகள் ஒன்று சேர்ந்துதான் இடித்தார்கள். இந்துத்துவாக்கள் அமைப்பு ரீதியாக பிரிந்து நின்றாலும், முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிணைந்தே செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் ஆலயத்தை இடிக்கும் பயங்கரவாதிகள் ஒன்று படும்போது, அதை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு மூலையில் முனங்கிக்கொண்டிருப்பார்களாம்!

இதில் நாங்கள் குர்ஆண்-ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்றுவேறு சொல்லிக்கொள்வது. இவர்களின் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், வாருங்கள்! நாம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும் முஸ்லிம்களின் பொதுப்பிரச்சினையில் ஒன்றுபடுவோம் என்று அனைத்து அமைப்பினரையும் ஆலோசித்து களமிரங்காதது ஏன்..? ஒன்று பட்டால் வெற்றி உண்டு என்பதை சமீபத்தில் வாலிகண்டபுரம் மைய்யவாடி பிரச்சினை உணர்த்திக்காட்டியதே! பின்பு ஏன் ஒன்றுபட தயக்கம்..? ஒரே காரணம் ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை காட்டும் காரணியாக பாபர் மஸ்ஜித் போராட்டத்தை பயன்படுத்த எண்ணுவதே!

இதை நாம் கற்பனையாக சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு அமைப்பின் துணை பொதுச்செயலாளரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை ஒன்று பட்டு நடத்த முயற்ச்சிக்கலாமே என்றோம். அதற்கு அவர், நல்ல கருத்துதான்! ஆனால் யாரும் ஒத்து வரமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர் பலத்தை காட்டுவதில்தான் முனைப்பாக இருப்பார்கள் என்று எதார்த்தமாக சொன்னார் இதுதான் இயக்கங்களின் நிலை. இதே நிலை தொடருமேயானால், அல்லாஹ் அறியாப்புரத்தின் மூலமாக அருள் செய்து மஸ்ஜித் நமக்கு கிடைத்தாலன்றி, இவர்களின் போராட்டங்கள் மூலமாக மஸ்ஜித் நமக்கு கிடைத்துவிடாது என்பதே உண்மை. உடனே இயக்க வெறியர்கள் சொல்லலாம் இட ஒதுக்கீடு கேட்டு தனித்தனியாகத்தான் போராடினோம் அதில் வெற்றி பெறவில்லையா என்று..? இட ஒதுக்கீடு மத சம்மந்தப்பட்டதல்ல. மேலும், குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க சட்டரீதியான அனுமதி அரசுக்கு உண்டு. அதோடு வாக்கு வங்கியும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இட ஒதுக்கீடு கிடைத்ததேயன்றி, இவர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி அரசு இடஒதுக்கீடு தரவில்லை.[இட ஒதுக்கீடு எங்களாலதான் கிடைத்தது என்று இயக்கங்கள் குடுமியை பிடித்து கொண்டது தனி விஷயம்].

எனவே அன்பான இயக்கத் தலைவர்களே உங்களின் போராட்டத்திற்கு பயன் கிடைக்க வேண்டுமென்றால், பள்ளிவாசல் இடத்தை மீட்பது ஒன்றே உங்கள் உண்மையான நோக்கமென்றால் ஒன்று பட்டு போராட முன்வாருங்கள். அதற்கு கீழ்காணும் வழிமுறையை கையாளுங்கள்.

1) ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்துவது.

2) அந்த போராட்டத்தில் அனைத்து அமைப்பினரும் சங்கமிப்பது.
3) ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லா அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஊர் ஊராக சென்று முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து போராட்டங்களில் அனைத்து முஸ்லிம்களும் பங்கெடுக்க வலியுறுத்துவது.

4) அவரவர் கொடியோடு, பேனரோடு வருவதில் தவறில்லை.

5) ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பிரதான தலைவர் தலைமை வகிக்க, மற்ற அமைப்பின் முன்னணி தலைவர்கள் முன்னிலை வகிக்கவேண்டும்.

6) உதாரணமாக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் , மதுரையில் அல்தாஃபி தலைமையிலும், ராமநாதபுரத்தில் பாக்கர் தலைமையிலும், திருச்சியில், விழுப்புரத்தில் இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டம் நடத்தலாம்.

7) போராட்டம் முடிவுற்றபின் ஒவ்வொரு பிரதான அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு, கவர்னர், முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மகஜர் அளிக்கலாம்.

8) ஊடகங்களில் ஒன்றிணைந்து பேட்டியளிக்கலாம். அப்போது நாங்கள் தனி தனி இயக்கமாக இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள்-நலன்கள் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம் என்று அழுத்தமாக கூறலாம்.
இவ்வாறு ஒன்று பட்டு பொதுப்பிரச்சினையில் போராடினால், ஊடகங்களின் கவனம் நம் பக்கம் திரும்பும். அதிகார வர்க்கத்தை அசைத்து பார்க்கும். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தால், அவர்கள் தேனீக்கள்போல் ஒன்று பட்டு எதிர்ப்பை காட்டுவார்கள் என்ற எண்ணம் உருவாகும். மேலும், இவ்வாறு ஒன்று பட்டு போராடும்போது இயக்கத்திற்கு அப்பாற்பட்ட முஸ்லிம்களும் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். இதன் மூலம் கலகலத்துபோன பாபர் மஸ்ஜித் போராட்டத்தை வலுவான போராட்டமாக மாற்றமுடியும். போராட்டத்தோடு நாம் ஒன்று பட்டு அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.

இதைவிடுத்து வழக்கம்போல நாங்கள் ஆளுக்கு ஒருபக்கம் நின்றுதான் கத்துவோம் என்றால், இயக்கங்களின் பிரிவினை போக்கிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாப்பானாக!

நன்றி : மண்ணடிகாகா