விரைவில் கடவுச்சீட்டு ஆணையம், அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுக்கு, அவ்வப்போதுள்ள நிலவரங்களைக் கைபேசியின் மூலம் குறுஞ்செய்தியாக அறியத்தரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக, திருச்சிப் பாஸ்போர்ட் அலுவலகத்தின் தலைமை அதிகாரி திரு S.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்காகத் தானியங்கி மென்பொருள் ஒன்றைப் பொருத்தி, அவ்வப்போதுள்ள முன்னேற்றத் தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அறியத்தரும் நடைமுறைக்கான பரிசோதனை, சென்ற சனிக்கிழமையன்று செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. அடுத்து வரும் சில நாட்களிலேயே இத்திட்டம் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஏதேனும் வழக்கத்திற்கு மாறான தடங்கல் அல்லது தேவை ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்; அதுவன்றி, வழக்கமான முன்னேற்றம் பற்றி அஞ்சல் மூலமே அறியத்தரப்படும் என்றும் அந்த அதிகாரி அறிவித்தார். துரித அஞ்சல் (Speed post) வழியாக வரும் பாஸ்போர்ட்டுகளுக்காக Barcode வசதியும் செய்யப்படும் என்றும் திரு பாலச்சந்திரன் கூறினார். அதற்கான தொடக்க ஏற்பாடுகளை அஞ்சல்துறை செய்யத் தொடங்கிவிட்டதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

இத்திட்ட விவரங்களைப் பயணச்சீட்டதிகாரி, கடந்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்த சுமார் 50 பேர் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்களின் கூட்டத்தில் அறிவித்தார்.